Sunday, December 27, 2015

ஃப்ரீ பேசிக்ஸ்(Free Basics) Vs நெட் நியூட்ராலிட்டி(Net Neutrality)

முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் Facebook கொண்டு வரும்
ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) க்கு ஆதரவளிக்கும்படி நண்பர்கள் வேண்டி வருகின்றனர். அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) குறித்தும் சிலர் எழுதுகின்றனர். இரண்டையும் குழப்பிக் கொண்டு எதை ஆதரிப்பது? எதை எதிர்ப்பது என புரிந்துகொள்ளாமலே நண்பர்கள் பலர் பகிரக் காண்கிறோம்.

அடிப்படைகள் சிலவற்றை பார்த்துவிடலாம்.

ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) என்றால் என்ன?
ஃப்ரீ பேசிக்ஸ் என்பது ஒரு திறன் பேசி பயனாளர் டேட்டா பேக் போடாமல் இருந்தாலும் சில இணைய தளங்களை, சில சேவைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர் எந்த இணைய தளத்தை பயன்படுத்துகிறார்களோ அந்த இணைய தளமே தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்திவிடும்.


நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) என்றால் என்ன?
நெட் நியூட்ராலிட்டி என்பது ஒரு வகையில் மக்களாட்சி போன்றது. ஆடு மேய்க்கும் அங்குராசுவுக்கும் ஒரு ஓட்டு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானிக்கும் ஒரே ஓட்டுதான். அது போல முக நூல் வலைத் தளமானலும் சரி, அல்லது எங்கோ ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவின் வலைத் தளமாக இருந்தாலும் சரி இரண்டு தளங்களையும் உங்களால் பயன் படுத்த இயலும். பயன்பாட்டுக்கு கட்டணம் ஒன்றே.


இலவச ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) நல்லதுதானே, இதை ஏன் எதிர்க்க வேண்டும்?
ஆரம்பத்தில் இணைய சேவை இலவசமாக அனைவருக்கும் கிடைப்பது மகிழ்ச்சியே. இந்த இலவச சேவையானது Differential pricing எனப்படும் மாறுபட்ட விலை விதிப்பின் ஒரு வடிவமே.  இன்று முகநூல் பயன்பாடு இலவசம் என்பவர்கள் ஒரு நாள் அதற்கு பல மடங்கு கட்டணம் விதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
தீபாவளி, பொங்கலுக்கு பல மடங்கு கட்டணம் விதிக்கும் ட்ராவல்ஸ் பேருந்து நிறுவனங்களை நாம் இன்றும் பார்க்கிறோம் அல்லவா? சென்னையில் வெள்ளம் வந்தபோது பால் ஒரு பாக்கெட் 150ரூபாய்க்கு விற்றவர்களையும் பார்த்தோமே!

தற்பொழுது கூகுள் போன்ற இணைய தேடுதலில் நீங்கள் தேடும் தகவல் இருக்கும் எல்லா வலைத்தளங்களும் பாரபட்சமின்றி காட்டப்படும். ஆனால் ஃப்ரீ பேசிக் சேவையில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் வலைத்தளங்கள் மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். கட்டணம் செலுத்த இயலாத ஒரு தளம் உங்களுக்கு மிகவும் தேவையான தகவலை கொண்டிருந்தாலும் அதை உங்களால் தேடி அடைய முடியாது.

ஆக, நமக்கு தேவையானது ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) அல்ல நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) மட்டுமே.