Sunday, August 30, 2015

Google OCR

      நீங்கள் மொழி தெரியாத ஒரு நாட்டில் உங்களுக்கு வழி சொல்ல யாரும் இல்லாத இடத்தில் சிக்கிக் கொண்டீர்கள். அங்கு இருக்கும் ஒரே திசை காட்டி தகவல் பலகையும் உங்களுக்கு புரியாத மொழியில் இருக்கிறது. அம்மொழி தெரியாததால் நீங்கள் எப்பக்கம் செல்வது என முடிவு செய்ய இயலாமல் தவிக்கிறீர்கள். இந்நிலையில் உங்கள் கைப்பேசியில் உள்ள ஒரு செயலியின் மூலம் அந்த பலகையை படம் எடுத்தால் சில வினாடிகளில் அதில் உள்ள தகவல்கள் உங்களுக்கு விருப்பமான மொழியில் அல்லது தமிழில் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யாருடைய உதவியும் இல்லாமல் திசையை தெரிந்து கொண்டு உங்கள் பயணத்தை தடங்கல் இல்லாமல் தொடரலாம் தானே?
     இதையே இன்னொரு மாதிரி யோசிப்போம். தமிழே தெரியாத ஒருவர் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பழங்கால கோயிலின் தமிழ் கல்வெட்டு/தகவல் பலகையின் முன் இருக்கிறார். அங்கு அவருக்கு மொழிபெயர்த்து சொல்ல யாருமே இல்லை. அவர் தன் கைப்பேசியில் அப் பலகையை படம் எடுக்கிறார், உடனே அந்த தமிழில் உள்ள தகவல்கள், அவர் விருப்ப மொழிக்கு மாற்றப்பட்டு தெரிகின்றது. அவர் எந்த சிரமுமின்றி அத் தகவலை தெரிந்து கொள்கிறார்.
    மேற் சொன்ன இரண்டும் மொழிபெயர்ப்பி (Translator), எழுத்துரு படிப்பான் (Optical Character Recognition, OCR) என்ற இரண்டும் இணைந்தால் சாத்தியமே. இப்பொழுது ஆங்கில மொழிக்கும், வேறு சில மொழிகளுக்கும் இந்த இரண்டு நுட்பங்களுமே மிக முன்னேறிய அளவில் இருக்கின்றன ( கூகுள் இமேஜ் தேடல் இந்த OCR நுட்பத்தை(யும்) பயன் படுத்துகிறது). ஆனால் இந்திய மொழிகளுக்கு, குறிப்பாக தமிழுக்கு இந்த OCR நுட்பம் இன்னும் பரந்துபட்ட அளவில் வரவில்லை.
    கணினிப் பயன்பாட்டில் வேறெந்த இந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழ் அதிக பயன்பாட்டில் உள்ளது. இருந்தாலும் சில வருடங்ளுக்கு முன்பு வரையில் அச்சு ஊடகங்கள் (பத்திரிக்கைகள், செய்தித் தாள்கள்), அரசு நிறுவனங்கள் தமிழை கணினிமயப் படுத்திய போது TISCI, TAM, TAB, PAANINI என வெவ்வேறு தரங்களை(Standards) பயன்படுத்தின. இதனால் சிறிது காலம் முன்பு வரையிலும் இணையத்தில் தமிழில் இருக்கும் பல பக்கங்கள் தேடுபொறிகளின் கண்களுக்கு தெரியாமலே இருந்தது. யுனிகோடு தமிழ் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து நாம் உள்ளிடும் பெரும்பாலான தகவல்கள் கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேடப்படும் சாத்தியம் கூடியுள்ளது. இருந்தாலும் நாம் கடந்த காலங்களில் காகித்தில் அச்சடித்து வைத்த நூல்கள், தனி நபர்கள் (அ) தன்னார்வ குழுக்கள் ஆகியவற்றால் ஒளி வருடப்பட்டு (Scan) மின்னூல்கள்/pdf ஆக மாற்றப் பட்டிருக்கும் தமிழ் புத்தகங்கள் project madhurai, padippakam.com, thamizham.net, scribd.com போன்ற வலைத்தலங்களில் இருந்தாலும், கூகுள் தேடுபொறியால் அவற்றை கண்டடைவதென்பதும், அவ்வாறே கண்டடைந்தாலும் அவற்றில் ஏதாகிலும் வார்த்தைகளை தேடுவதென்பதும் இன்னும் கடினமான பணியாகவே இருந்து வந்திருக்கிறது. காரணம் அதில் உள்ள தமிழ் எழுத்துக்களை கணினி படிப்பதற்க்குண்டான நுட்பம் இன்னும் கைவராமலே இருந்தது. அல்லது சந்தையில் இருக்கும் சில நுட்பங்களின் விலையும், தரமும் உவப்பானதாக இல்லை.
    இச்சூழ்நிலையில் தான் கூகுள் வெளியிட்டுள்ள தமிழ் OCR மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
      எந்த மொழிக்குறியதாக இருந்தாலும் OCR நுட்பத்தின் எனக்குத் தெரிந்த பொதுவான பயன்பாடுகள்:
1) போட்டோக்கள், படங்கள் (jpeg,png,tif) என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றில் உள்ள அந்த குறிப்பிட்ட மொழி எழுத்துக்களை கண்டறிவதும் அவற்றை கணினி படிக்கக் கூடிய ASCII குறியீடுகளாக மாற்றுவது.
2) ஒளி வருடப்பட்டு படங்களாக சேகரிக்கப் பட்ட பழைய தரவுகளில் உள்ள எழுத்துக்களை கண்டறிந்து அவற்றை யுனிகோடுக்கு மாற்றுவதன் மூலம் கணினிமயத் தேடுதலை சாத்தியப் படுத்துவது. (தற்பொழுது தேடு பொறிகள் இத்தகைய தரவுகளுக்கு கொடுக்கப் பட்டுள்ள லேபில்கள், மற்றும் கீவோர்டுகள் மூலமே தேடுகின்றன.)
3) விண்ணப்பங்கள், படிவங்கள் முதலியவற்றில் நிரப்பப் பட்டுள்ள விவரங்களை, கணினி படிக்கும் தகைவில் (machine readable format) அல்லது டேட்டா பேஸில் சேமிக்கும் வகையில் மாற்றுவது. இதன் மூலம் தரவுகளை கணினிமயப் படுத்தும் வேகம் அதிகரிக்கும். விவரங்களை மனிதர்கள் உள்ளிடும் போது நிகழும் மனிதத் தவறுகளை தடுப்பது. ( உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில்/ குடும்ப அட்டையில் தவறாக அச்சாகும் சாத்தியம் குறையும்)
4) எழுத்துகள்( ஒரு எழுத்து, ஒரு பத்தி, ஒரு பக்கம், அல்லது ஒரு முழு நூல்) படங்களாக சேமிக்கப் படும்போது வன்தட்டில் அதிக இடம் பிடிக்கும். அதே தகவல்கள் ASCII க்கு மாற்றப் பட்டு சேமிக்கப்படும் போது மிகக் குறைந்த இடத்தையே அடைக்கும். அதே நேரத்தில் இவற்றை ஈ புக் ரீடர்களிலும், திறன் பேசிகளிலும், அளவில் சிறிதாக இருப்பதால், எளிதாக படிக்க இயலும்.
5) ஒரு படத்தில் இருக்கும் தகவல்களை படித்து புரிந்து கொண்டு அதை வேறொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது. (கூகுள் டிரான்லேட் போன்றவை இப்பொழுது இப்பொழுது நாம் ASCIIஇல் உள்ளிடும் வார்த்தைகளை மொழி பெயர்க்கிறது. ஒரு இமேஜ்-ல் இருக்கும் எழுத்தை படிக்காது)

மேற் குறிப்பிட்ட எல்லா பயன்களையும் தமிழ் எழுத்துகள் இருக்கும் படங்கள், பிடிஎஃப் கோப்புகள், வேறு தட்டச்சுத் தரத்தில் இருக்கும் மின்மயப் படுத்தப் பட்ட தரவுகள் ஆகியவற்றில் இருந்து பெற தமிழ் OCR உதவுகிறது.

இந்த நுட்பம் ஆகச் சிறந்ததா? தவறே இழைக்காதா? என்றால் அதற்க்கு 'இல்லை' என்பதே பதிலாக இருக்க முடியும்.
1) இது ஒரு வளர்ந்து வரும் நுட்பமே. எழுத்துகளை கண்டறிவதில் தவறுகள் நேர வாய்ப்புகள் உள்ளது. Accuracy குறைவு.
2) ஒளி துல்லியம்(image resolution) குறைந்த படங்களை படிக்கும் திறன் எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்தும், மேற் சொன்ன accuracy அளவுமே இதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
3) கையால் எழுதப்படும் ஆங்கில எழுத்துக்களை படிப்பதற்கு இவ்வளவு முதிர்ந்த ஆங்கில OCRஏ திணறுகிறது. இந்நிலையில் இப்பொழுதுதான் வளர்ந்து வரும் தமிழ் OCR எந்த அளவு கையால் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களை படிக்கும் என்பது கேள்வியாகவே இருக்கிறது.
கூகுள் இந்த வேலையை செய்வதால் இருக்கும் நன்மைகள்:
1) சிறு நிறுவனங்களை விட கூகுள் இதை எடுத்துச் செய்வதால், அவர்களின் முந்தைய பயனிகளின்/செயலிகளின் தரத்தை பார்க்கும் போது, இதன் தரம் சிறந்ததாகவும் இலவசமாக பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.

2) கணினியில் மட்டும் இதன் பயன்பாடு நின்று விடாமல், ஆன்டிராய்டு திறன் பேசிகளிளும் பயன்படுத்தக்கூடிய வகையில் இதை மேம்படுத்த வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு நடந்தால் நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன கற்பனை நிகழ்வுகள் இரண்டும் வெகு விரைவில் சாத்தியப் பட்டுவிடும்.
smile emoticon
"இதனால் ஏதும் உடனடிப் பயன் உள்ளதா?" என்றால் ஒரு சிலருக்கு மட்டும் என்பதே பதிலாக இருக்கும். உதாரணமாக, உங்கள் கையில் ஒரு துண்டுப் பிரசுரம்/ புத்தகத்தின் ஒரு பக்கம் உள்ளது. அதை உங்கள் வலைத்தளத்திலோ, முகநூல் பக்கத்திலோ பதிய விரும்புகிறீர்கள். இன்று உங்களுக்கு இருக்கும் இரண்டு வழிகள்
1) அந்த துண்டு பிரசுரம்/பக்கத்தை ஸ்கேன் செய்து அப்படியே படமாக (image) பதிவது. ஆனால் அதில் இருக்கும் எழுத்துகள், வார்த்தைகள் முதலியவை தேடு பொறியினால் தேட முடியாது. லேபிள்கள், கீவோர்டுகள் முதலியவை நாமாக குறிப்பிட வேண்டும்.
2) அந்த துண்டு பிரசுரம்/பக்கத்தில் உள்ள தகவலை மீண்டும் (நேரம் செலவளித்து) தட்டச்சி பதிவது. இந்த முறையில் அதில் உள்ள வரைகலை(format) சிதைந்துவிடும். ஆனால் தேடு பொறிகள் இலகுவாக உங்கள் தகவலை தேட இயலும்.
கூடிய சீக்கிரம் கூகுள் OCR இந்த இரு முறைகளின் நன்மைகளையும் கொடுக்கும் என நம்புகிறேன். அதாவது, நீங்கள் பதிந்த படத்தில் (image) இருக்கும் தகவல்களை தேடு பொறிகளால் தேட இயலும். அதில் உள்ள வார்த்தை/வாக்கியங்களை காப்பி/பேஸ்ட் செய்ய இயலும்.

Sunday, September 8, 2013

(கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்

சமீபமாக பேஸ்புக்கில் பெண்கள் மெட்டி அணிவதில் உள்ள நன்மைகள் பற்றியும், பெண் ஏன் சேலை அணிய வேண்டும் என்றும், பெண் ஏன் கணவன் சாப்பிட்டு முடித்த எச்சில் தட்டில் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் அதிக அளவில் பகிரப்படுகிறது. இது என்ன வகையான மனநிலை என புரியவில்லை. அது ஏன் எல்லா கலாச்சார அடையாளங்களையும் பெண்களே தூக்கி சுமக்க வேண்டியுள்ளது? கேட்டால் பெண்ணின் கையில் தான் குடும்ப கௌரவமும், குழந்தைகளின் எதிர்காலமும் உள்ளது என்று சப்பைக்கட்டு வேறு.

முதலில் சொன்ன விஷயத்துக்கே வருவோம்.

பெண்கள் மெட்டி அணிவது - முன்பு மெட்டி திருமணமானதன் அடையாளம், மெட்டி அணிந்த பெண்ணை 'திருமணமானவள்' என எளிதாக அடையாளம் காண்பதற்காகவே என்றனர். இன்னொரு கட்டுரையில் மெட்டி என்பது முற்காலத்தில் ஆணால் அணியப்பட்டது. அது தலையை குனிந்து நடக்கும் பெண்ணுக்கு திருமணமானவனை எளிதில் அடையாளம் காண உதவியது என்றனர். அப்புறம் மெட்டி 'மர்மான முறையில்' பெண்னின் கால் விரலுக்கு தாவி விட்டது. இப்போதோ மெட்டி ஒரு 'மின் கடத்தி (good conductor)' என்றும், அது காலில் உள்ள நரம்பை தொடுவதன் மூலம் நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால் இந்த வாதத்துக்கு எந்த அறிவியல் பூர்வமான நிரூபனமும் இல்லை ('நியூயார்கிலேயே கடை போட்டு விக்கிறான்' என்பதை தவிர்த்து). அவ்வளவு நல்லதென்றால் ஆண்களும் அணியலாமே? அது ஏன் பெண் மட்டும் அணிய வேண்டும்?ஆணின் காலில் அந்த நரம்பு இல்லையா?

அடுத்ததாக, எச்சில் தட்டில் சோறு சாப்பிடுவது - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிட்டால் தான் கணவனுக்கு பிடித்த/பிடிக்காத உணவு எது என தெரியுமென்றனர். ஏன், அதை கண்களால் பார்த்தாலே தெரியுமே? எந்த உணவு பதார்த்தங்களை சாப்பிடாமல் விட்டிருக்கிறானென்று. சாப்பிட்டுதான் பார்க்க வேண்டுமா? இதை சொன்னால் 'இல்லை, இல்லை எச்சில் தட்டில் சாப்பிடுவது கணவன் மேலுள்ள பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தவே' என்று ஒரு புதுக் காரணம். அப்படியென்றால் ஏன் எந்த ஆணையும் அவன் மனைவியின் தட்டில் சாப்பிட சொல்வதில்லை? ஆணுக்கு தன் மனைவியின் மேல் அன்போ, பாசமோ இல்லையா? இல்லை... வெளிப்படுத்த தேவை இல்லையா?

பெண்கள் கல்வி,வேலை, பொருளாதார சுதந்திரம் என எல்லா துறைகளிலும் பாய்ச்சல் நிகழ்த்துவதை கண்டு சித்தம் கலங்கியவர்களின் வயிற்றெரிச்சலாகவே இந்தகைய (கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்களை பார்க்கத் தோன்றுகிறது.

வருத்தப் படாத வாலிபர் சங்கம்

நேற்று 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படம் பார்த்தேன். இடையில் கொஞ்சம் சவ்வாக இழுத்ததென்றாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல, படம் சொல்லாமல் விட்டதை பற்றியே நான் பேசவந்தது.

M.Sc, M.Phill முடித்தும் வேலை இல்லாமல் கிராமத்தில் பெண்களுக்கு நூல் விடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் கல்யாணமாகியும் மாமனார் காசில் பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டு, ஒரு விட்டேத்தியான மனப்பாங்குடன் இருப்பதுதான் இன்றைய சமூகத்தின் நிலையென்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பொதுவாக படங்களில் வரும் மிகை உணர்ச்சிக்காகவும், யதார்த்ததிற்கொப்பாத ஒரே பாட்டில் பெரிய ஆளாகிவிடுவதாக காட்டுவதற்காகவும் கேலி செய்யப்படுபர் விக்கிரமன். ஆனாலும் 'நல்லவன் இறுதியில் வெல்வான், விடாமுயற்சி ஒருவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்' என்பது போன்ற அவர் பட கருத்துகள் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு முன்னேற உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தன/அளிக்கும் என்பதை மறுக்க இயலாது.

அந்த கண்ணோட்டத்தில் 'வ.ப.வா.ச', 'சூது கௌவ்வும்' போன்ற படங்களை பார்த்து இவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றார்கள் என எண்ணும்போது அயர்சியே மேலிடுகிறது.

எனக்கெல்லாம் இராத்திரி தூங்கும்போது
என் தாத்தா பாட்டி கதை சொல்லி தூங்க வைப்பர். தெரிந்தோ தெரியாமலோ கதையில் பொதிந்துள்ள நீதி மனதிலும் பதிந்து வாழ்கையில் வழி நடத்துகிறது. இப்போதோ தாத்தாவும், பாட்டியும் இருந்த இடத்தை டீ.வி-யும், சினிமாவும் எடுத்துக் கொண்டன. இவற்றில் வரும் நாடகங்களும், திரைப்படங்களும் சொல்லித்தரும் நீதி இதுதானென்றால் இதைபார்த்து வளரும் சந்ததி எப்படி இருக்கும்?

அது சரி, எந்த வழியிலாவது சம்பாதிப்பவன் சாமர்த்தியசாலியாகவும், லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவனாகவும் பார்க்கப்படும் சமூகத்தில் இத்தகைய கருத்துகளை இக்கால திரைப்படங்களில் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே?

விநாயகர் சதூர்தி

இன்று விநாயகர் சதூர்தி. தமிழ்நாட்டில் 5000-க்கும் அதிகமான மண்டலிகள் விநாயகர் சிலைகள் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 20/25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சதூர்திக்கு சிலை வைக்கும் கலாச்சாரம் இந்த அளவுக்கு இல்லை. அன்று அய்யனாரும், மாடனும், நாகர் சாமியும் இருந்த இடங்களான ஆற்றங்கரை, ஊரணிக்கரை, குளத்தங்கரை போன்றவற்றை இன்று விநாயகர் ஆக்கிரமித்துவிட்டார்.

மாரியம்மாள், அங்காளம்மாள், முத்து மாரி, செவிட்டு ராமசாமி, தண்டு மாரி என்று இருந்த எங்கள் குலசாமிகள் எல்லாம் இன்று பெண்பால் சாமிகள் சக்தி/பராசக்தியாகவும், ஆண்பால் சாமிகள் சிவன்/விஷ்ணுவின் அவதாரம் அல்லது அடிப்பொடி என்றும் இன்று புனையப்பட்டு விட்டன.

சுதந்திர போரட்டத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்ட பாலகங்கதர திலகரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆயுதமான விநாயகர் வழிபாடு இன்று எம்மக்களின் குலசாமிகளை அழித்து, இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையுடைய ஒரு கலாச்சாரத்தை நிறுவுவதற்கும், மாற்று மத சிறுபான்மையினருக்கெதிரான பலத்தை காட்டுவதற்குமான ஆயுதமாக்கபட்டுள்ளதை காலத்தின் கோலம் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?

Monday, November 5, 2012

I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


பி.கு: ஏனைய வலைஞர்களின் தொடர் பதிவுகளையும் காண: http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

Friday, November 19, 2010

நீண்ட நாட்களுக்கு பிறகு...

2006 -ல் வேலை நிமித்தமாக அயல் நாட்டில் குடியமர்ந்த எனக்கு ஆகசிறந்த தகவல் களஞ்சியமாகவும் ஊர் நடப்புகளை அறிய ஒரு புலனாகவும் இருந்தவை வலைப்பூக்களே!.

ஆனால், 2007-ல் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகள் ஆயாசத்தையே விளைவித்தன. அதன்பின் வலைப்பூக்களில் பின்னூட்டாமல் வெறுமனாக மொய்ப்பதாகவே இருந்து வந்தேன்.

ஆனால், இப்பொழுது என் வலைப்பூவை மீண்டும் மலர்பிக்க முடிவு செய்துள்ளேன்.
விரைவில் வலை திரட்டிகளிலும் இணைக்க எண்ணம் கொண்டுள்ளேன்.