Sunday, September 8, 2013

(கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்

சமீபமாக பேஸ்புக்கில் பெண்கள் மெட்டி அணிவதில் உள்ள நன்மைகள் பற்றியும், பெண் ஏன் சேலை அணிய வேண்டும் என்றும், பெண் ஏன் கணவன் சாப்பிட்டு முடித்த எச்சில் தட்டில் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் அதிக அளவில் பகிரப்படுகிறது. இது என்ன வகையான மனநிலை என புரியவில்லை. அது ஏன் எல்லா கலாச்சார அடையாளங்களையும் பெண்களே தூக்கி சுமக்க வேண்டியுள்ளது? கேட்டால் பெண்ணின் கையில் தான் குடும்ப கௌரவமும், குழந்தைகளின் எதிர்காலமும் உள்ளது என்று சப்பைக்கட்டு வேறு.

முதலில் சொன்ன விஷயத்துக்கே வருவோம்.

பெண்கள் மெட்டி அணிவது - முன்பு மெட்டி திருமணமானதன் அடையாளம், மெட்டி அணிந்த பெண்ணை 'திருமணமானவள்' என எளிதாக அடையாளம் காண்பதற்காகவே என்றனர். இன்னொரு கட்டுரையில் மெட்டி என்பது முற்காலத்தில் ஆணால் அணியப்பட்டது. அது தலையை குனிந்து நடக்கும் பெண்ணுக்கு திருமணமானவனை எளிதில் அடையாளம் காண உதவியது என்றனர். அப்புறம் மெட்டி 'மர்மான முறையில்' பெண்னின் கால் விரலுக்கு தாவி விட்டது. இப்போதோ மெட்டி ஒரு 'மின் கடத்தி (good conductor)' என்றும், அது காலில் உள்ள நரம்பை தொடுவதன் மூலம் நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால் இந்த வாதத்துக்கு எந்த அறிவியல் பூர்வமான நிரூபனமும் இல்லை ('நியூயார்கிலேயே கடை போட்டு விக்கிறான்' என்பதை தவிர்த்து). அவ்வளவு நல்லதென்றால் ஆண்களும் அணியலாமே? அது ஏன் பெண் மட்டும் அணிய வேண்டும்?ஆணின் காலில் அந்த நரம்பு இல்லையா?

அடுத்ததாக, எச்சில் தட்டில் சோறு சாப்பிடுவது - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிட்டால் தான் கணவனுக்கு பிடித்த/பிடிக்காத உணவு எது என தெரியுமென்றனர். ஏன், அதை கண்களால் பார்த்தாலே தெரியுமே? எந்த உணவு பதார்த்தங்களை சாப்பிடாமல் விட்டிருக்கிறானென்று. சாப்பிட்டுதான் பார்க்க வேண்டுமா? இதை சொன்னால் 'இல்லை, இல்லை எச்சில் தட்டில் சாப்பிடுவது கணவன் மேலுள்ள பாசத்தையும், அன்பையும் வெளிப்படுத்தவே' என்று ஒரு புதுக் காரணம். அப்படியென்றால் ஏன் எந்த ஆணையும் அவன் மனைவியின் தட்டில் சாப்பிட சொல்வதில்லை? ஆணுக்கு தன் மனைவியின் மேல் அன்போ, பாசமோ இல்லையா? இல்லை... வெளிப்படுத்த தேவை இல்லையா?

பெண்கள் கல்வி,வேலை, பொருளாதார சுதந்திரம் என எல்லா துறைகளிலும் பாய்ச்சல் நிகழ்த்துவதை கண்டு சித்தம் கலங்கியவர்களின் வயிற்றெரிச்சலாகவே இந்தகைய (கலாச்சாரமென்ற பெயரிலான) புலம்பல்களை பார்க்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment