நேற்று 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' படம் பார்த்தேன். இடையில் கொஞ்சம் சவ்வாக இழுத்ததென்றாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல, படம் சொல்லாமல் விட்டதை பற்றியே நான் பேசவந்தது.
M.Sc, M.Phill முடித்தும் வேலை இல்லாமல் கிராமத்தில் பெண்களுக்கு நூல் விடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் கல்யாணமாகியும் மாமனார் காசில் பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டு, ஒரு விட்டேத்தியான மனப்பாங்குடன் இருப்பதுதான் இன்றைய சமூகத்தின் நிலையென்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
பொதுவாக படங்களில் வரும் மிகை உணர்ச்சிக்காகவும், யதார்த்ததிற்கொப்பாத ஒரே பாட்டில் பெரிய ஆளாகிவிடுவதாக காட்டுவதற்காகவும் கேலி செய்யப்படுபர் விக்கிரமன். ஆனாலும் 'நல்லவன் இறுதியில் வெல்வான், விடாமுயற்சி ஒருவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்' என்பது போன்ற அவர் பட கருத்துகள் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு முன்னேற உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தன/அளிக்கும் என்பதை மறுக்க இயலாது.
அந்த கண்ணோட்டத்தில் 'வ.ப.வா.ச', 'சூது கௌவ்வும்' போன்ற படங்களை பார்த்து இவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றார்கள் என எண்ணும்போது அயர்சியே மேலிடுகிறது.
எனக்கெல்லாம் இராத்திரி தூங்கும்போது
என் தாத்தா பாட்டி கதை சொல்லி தூங்க வைப்பர். தெரிந்தோ தெரியாமலோ கதையில் பொதிந்துள்ள நீதி மனதிலும் பதிந்து வாழ்கையில் வழி நடத்துகிறது. இப்போதோ தாத்தாவும், பாட்டியும் இருந்த இடத்தை டீ.வி-யும், சினிமாவும் எடுத்துக் கொண்டன. இவற்றில் வரும் நாடகங்களும், திரைப்படங்களும் சொல்லித்தரும் நீதி இதுதானென்றால் இதைபார்த்து வளரும் சந்ததி எப்படி இருக்கும்?
அது சரி, எந்த வழியிலாவது சம்பாதிப்பவன் சாமர்த்தியசாலியாகவும், லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவனாகவும் பார்க்கப்படும் சமூகத்தில் இத்தகைய கருத்துகளை இக்கால திரைப்படங்களில் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே?
No comments:
Post a Comment